Sunday, 18 September 2016

ஏற்றுமதி செய்வதர்க்கான பொருளை தேர்ந்தெடுப்பது எப்படி ?


நண்பர்களுக்கு வணக்கம்!

இந்த பதிவில் "ஏற்றுமதி செய்வதர்க்கான பொருளை தேர்ந்தெடுப்பது எப்படி ? " என்பதைப் பற்றி பார்ப்போம். 

ஏற்றுமதி துறையில் நுழைய நினைக்கும் பெரும்பாலோனர் கேட்கும் முதல் கேள்வி, "ஏற்றுமதி செய்வது எப்படி?" எனில், அவர்கள் கேட்கும்  இரண்டாவது கேள்வி, "எந்த பொருளை ஏற்றுமதி செய்வது ?" என்பதாகத்தான் இருக்கும். 

ஆம்! நம்மில் IE Code எடுத்தும் கூட, ஏற்றுமதி செய்யமால் இருப்போர் எத்தனையோ பேர். காரணம், அவர்களுக்கு எந்த பொருளை ஏற்றுமதி செய்வது ? என்பதில் ஆரம்பிக்கும் குழப்பம், எப்படி லாபகரமாக ஏற்றுமதி செய்வது ? என்பது வரை தொடர்வதால்தான்.

பொதுவாக, ஏற்றுமதி துறையில் வெற்றி என்பது அவர்கள் தேர்ந்தெடுக்கும் பொருளைப் பொருத்தும்,   அந்த பொருளின் தரத்தை பொருத்தும்தான் அமையும். பிறகுதான் மற்றெதெல்லாம்.

ஏற்றுமதி தொழில் செய்ய முடிவெடுக்கும் முன், முதலில் எந்த பொருளை ஏற்றுமதி செய்யப் போகிறோம் ? என்பதில் தெளிவாக இருங்கள்.  

நீங்கள், இந்த ஒரு பொருளை மட்டும்தான் ஏற்றுமதி செய்ய முடியும் என்று  எந்த ஒரு வரைமுறையும் இல்லை. இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனகரத்தால் ( Director General of Foreign Trade ) தடை செய்யப் படாத எந்த ஒரு பொருளையும் நீங்கள் தாராளமாக ஏற்றுமதி செய்யலாம்.

தற்போதைய நிலவரப்படி,  இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனகரத்தால் ( DGFT ) ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப் பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கை சுமார் 11630-க்கும் மேல், எனவே கவலை வேண்டாம். சரி, விஷயத்துக்கு வறுவோம்.

முதலில், நீங்கள் ஏற்றுமதி செய்ய தேர்ந்தெடுக்கும் பொருளானது,முடிந்த வரை உங்களுக்கு நன்கு தெரிந்த, நன்கு பரிச்சியமான பொருளாக  இருக்குமாறு  பார்த்து கொள்ளுங்கள். காரணம், உங்களுக்கு அதனைப் பற்றிய விபரங்கள் ஏற்கனவே தெரிந்திருக்கும்.

அவ்வாறில்லாமல் வேறு பொருட்களை தேர்ந்தேடுப்பதாயினும் தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். ஆனால், அதனைப்பற்றிய முழு விபரங்களும் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம்.

அடுத்து, அந்த பொருளானது உங்களுக்கு வேண்டிய நேரத்தில், வேண்டிய அளவில், வேண்டிய தரத்தில் தங்களுக்கு கிடைக்குமா? என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள். 

ஏனெனில், எந்த ஒரு இறக்குமதியாளரும் தங்களிடம் முதலில் கேட்பது, அந்த பொருளை பற்றிய முழு விபரங்களைத்தான். பிறகுதான் மாதிரி (Sample), ஒப்பந்தம் ( Contract ) எல்லாம். 

எனவே, நீங்கள் ஏற்றுமதி செய்ய தேர்ந்தெடுத்துள்ள பொருளை பற்றிய கீழ்வரும் அனைத்து விபரங்களையும், கண்டிப்பாக தெரிந்து வைத்திருங்கள்.

  (1) அதன் தரம், 

  (2) அதன்  எடை,

  (3) அதன் அடக்க விலை மற்றும் ( FOB ) விலை,
  (4) அதனை பேக்கிங் செய்யும் முறை,

  (5) அதனை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு,

  (6) அதன் தற்போதைய சந்தை விலை நிலவரம்,

  (7) அதற்கான ஊக்கத்தொகை,

  (8) அதற்கான வரிச்சலுகை,

  (9) அதற்கான ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் ( EPC )
(10) அதனை ஏற்றுமதி செய்ய தற்காலிக தடை ஏதும் உள்ளதா ? என்பதைப்

       பற்றிய  விபரம். ( Banned or Restricted Status ) மற்றும் அதன் ( HS Code ).

1 comment: