Tuesday, 17 May 2016

சென்னை:  பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல்  பெறுவதற்கு விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம்

சென்னை:  பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல்  பெறுவதற்கு விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக  தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 
அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2016ம் ஆண்டின் மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் வரும் 17ம் தேதி காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தேர்வுத்துறையின் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.தனித்தேர்வர்கள் வரும் 19ம் தேதி முதல் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை  பெற தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேலும், வரும் 21ம் தேதி முதல் தாங்கள் பயின்ற மற்றும் தேர்வெழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்று கொள்ளலாம். தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தாங்கள் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வரும் 17 மற்றும் 18ம் தேதி ஆகிய இரு நாட்களில் விண்ணப்பிக்கலாம்.தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.

 விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்க கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் பகுதி I மொழி -ரூ.550, பகுதி II மொழி (ஆங்கிலம்) ரூ.550, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல் மறுகூட்டலுக்கு பகுதி-I மொழி, பகுதி -II மொழி( ஆங்கிலம்) மற்றும் உயிரியல் ஒவ்வொன்றுக்கும் ரூ.305( இரு தாள்கள் சேர்த்து), ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணமாக விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும்.பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு வரும் ஜூன் மாதம் இறுதியில் நடைபெறும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment