10 ஆம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் - எளிதில் தேர்ச்சி பெற சில குறிப்புகள்-பகுதி-1
அன்பு மாணவர்களே !
ஆங்கிலம் முதல் தாளை விட மிக மிக எளிதானது ஆங்கிலம் இரண்டாம் தாள் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே.
முதல் தாளை சரி வர எழுதவில்லை எனினும், எளிதில் தேர்ச்சி பெற வைப்பது இரண்டாம் தாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இரண்டாம் தாளில் 60 மதிப்பெண்கள் பெரும் அளவிற்கு கடுமையாக முயற்சித்தீர்கள் என்றாலே போதும். வெற்றி நிச்சயம். அதற்கு கீழ்க் காணும் குறிப்புகள் உங்களுக்கு பயனுடையதாக இருக்கும் என நம்புகிறோம் .
இரண்டாம் தாளில் மொத்தம் 19 வினாக்கள் உண்டு. இதில் முதல் 35 மதிப்பெண்கள் துணைப்பாடப் பகுதியிலிருந்து கேட்கப்படும்.
கேள்வி எண் 1:
துணை பாடத்தின் ஏதாவது ஒரு கதையிலிருந்து ஒரு பத்தி மட்டும் கொடுக்கப்பட்டு அதில் 5 கேள்விகள் பூர்த்தி செய்யச் சொல்லி கேட்கப்படும். அதற்கான விடைகள் கீழேயே கொடுக்கப்பட்டிருக்கும்.
அதிலிருந்து பொருத்தமான பதிலை தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். தெரிந்த பதிலை ஒவ்வொன்றாக பூர்த்தி செய்ய, தெரியாத விடை தானாகவே பூர்த்தி அடையும் நிலைக்கு வந்துவிடும். எனவே பதற்றமின்றி பொறுமையாக பதிலை கண்டுபிடிக்கவும்.
கேள்வி எண் 2:
துணைப்பாடப் பகுதியிலிருந்து 5 வினாக்கள், வரிகளாக இருக்கும். அந்த 5 வரிகளில் குறிப்பிடப்படும் கதாப்பாத்திரம் (Character) யார்? அல்லது அந்தக்குறிப்பிட்ட வரியை சொல்பவர் (Speaker) யார்? என்பது தான் கேள்வி.
இக் கேள்விக்கு துணைப் பாடக் கதைப் பகுதிகளில், அடைப்புக் குறிகளுக்குள் இருக்கிற வார்த்தைகளையும்,வாக்கியங்களையும் நன்றாக படித்து அவற்றைச் சொன்னது யார் என சொன்னவரின் பெயரை தவறில்லாமல் எழுதிப் பார்த்து பழகுங்கள் . உறுதியாக 5 மதிப்பெண்களை பெற்றுவிடலாம்.
(முதல் மூன்றிலிருந்து 2 கேள்விகளாவது வரும்.)
கேள்வி எண் 3:
துணைப் பாடக் கதைகளின் பாத்திரங்கள் ஒரு புறமும், அவர்களுடன் தொடர்புடைய சில செயல்கள் மறுபுறமும் கொடுக்கப்பட்டு, சரியாகப் பொருத்தும்படி கேட்கப்பட்டிருக்கும்.
இடதுபுறம் உள்ள வினாவை எழுதி, வலது புறம் உள்ள பதிலை சரியாக பொருத்தி எழுதவும். பதட்டமில்லாமல் நன்கு படித்துப் பார்த்து தெரிந்த வினாக்களுக்கான விடைகளை பொருத்திக் கொண்டே வந்தால், தெரியாத வினாக்களுக்கான விடைகள் கடைசியில் சரியாக பொருந்திவிடும். இதிலும் நீங்கள் 5 மதிப்பெண்கள் அல்லது குறைந்த பட்சம் 3 மதிப்பெண்களாவது பெற்றுவிடலாம்.
கேள்வி எண் 4:
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுதல்:
மொத்தம் 5 வினாக்கள் இருக்கும். ஒவ்வொரு வினாவுக்கும் 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும். சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். இதுவும் துணைப்பாட கதைப் பகுதியிலிருந்து தான் கேட்கப்படும்.
கேள்வி எண் 5:
துணைப்பாடப் பகுதியிலிருந்து ஏதாவது ஒரு பத்தி கொடுக்கப்பட்டு அது தொடர்பாக கிழே 5 வினாக்கள் இருக்கும். ஒருமுறைக்கு இருமுறை வினாக்களை ஒவ்வொன்றாக நன்றாகப் படித்துப் பார்த்து வினாவிலுள்ள வார்த்தைகள் கொடுக்கப்பட்ட பத்தியில் எங்கு உள்ளதோ, அந்த வரியை அப்படியே எடுத்து எழுதிவிடலாம். உறுதியாக 5 மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பு உள்ளது.
கேள்வி எண் 6:
மன வரை படம்:
கொடுக்கப்பட்ட கேள்வியை அப்படியே வரைந்து கொள்ளவும்.
பதில் எழுத வேண்டிய கோடிட்ட பகுதியில் கேட்கப்பட்ட கேள்வி தொடர்பான பதில்கள் வினாத்தாளில் எங்கேயும் இருக்கிறதா எனப் பார்த்து அதனைப் பூர்த்தி செய்யவும். வினா கேட்கப்பட்டுள்ள பாடத்திலிருந்து மட்டுமே பதிலை எழுத வேண்டும். எழுதிய பதிலை அடிக்கோடிட்டு காட்டவும். The Piano Lesson என்ற துணைப்பாடப் பகுதியில் புத்தகத்தில் ஒரு மன வரைபடம் உள்ளது. அது மார்ச்சு பொதுத் தேர்வில் இதுவரை கேட்கப்படவில்லை. எனவே அதை நன்றாக படித்துக் கொள்ளவும்.
கேள்வி எண் 7:
Paragraph:
3 Paragraph வினாக்கள் துணைப்பாடப் பகுதியிலிருந்து கேட்கப்படும். ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் விடையளித்தால் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
SAM, THE PIANO LESSON, THE FACE OF JUDAS ISCARIOT - என்ற முதல் மூன்று கதைப்பகுதிகளுக்குரிய Paragraph களை நன்றாக படித்துக் கொண்டால், நிச்சயமாக ஒன்று வந்துவிடும். எனவே முதல் 3 Paragraph களை நன்றாக படித்துக் கொள்ளவும்.
ஒருவேளை படிக்காத எதுவும் வந்துவிட்டால், விட்டு விட வேண்டாம்.1+5=7 என நினைத்துக் கொள்ளவும்.
அதாவது "முதல் கேள்வியில் ஒரு paragraph கொடுக்கப்பட்டு கேட்கப்படும் கேள்வி அல்லது 5 ஆவது கேள்வியில் ஒரு paragraph கொடுத்து கேட்கப்படும் கேள்வி" - இந்த இரண்டில் 7 ஆவது கேள்வியான Paragraph கேள்விப் பாடத்திலிருந்து எது இருக்கிறதோ, அதை கொஞ்சம் மாற்றி அல்லது அப்படியே எழுதிவிட்டால் 2 அல்லது 3 மதிப்பெண்கள் எடுக்கும் வாய்ப்பு உள்ளது.
கேள்வி எண் 8:
Note Making and Summary writing:
சிரமம் ஏதுமின்றி 8 அல்லது 9மதிப்பெண்களை உறுதியாகத் தரும் பகுதி இதுவாகும்.
வினாவில் Make notes .... என ஆரம்பிக்கும். அதில் உள்ள இரண்டாவது வார்த்தையான Notes ஐ தலைப்பாக நடுவில் எழுதி அடிக்கோடு போடவும் .
வினாவில் உள்ள பத்தியில், ஒரு எழுத்து (a), இரண்டெழுத்து (an,at,on,in,to,of,so), மூன்று எழுத்து (for,but,and...)- இவற்றை எல்லாம் நீக்கி விட வேண்டும். அதே போல், அடைப்புக் குறிக்குள் ஏதேனும் வாக்கியங்கள் இருந்தால் அவற்றையும் நீக்கிவிட வேண்டும்.
இப்போது மீதமிருக்கிற பகுதியிலிருந்து அதிகபட்சம் 5 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். அப்படி எழுதும் போது, மிக முக்கியமாக குறிப்புகளாக எழுத வேண்டும். அதாவது ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளாக எழுதி கோடு போட வேண்டும்.
எடுத்துக்காட்டாக,
Notes:
Butterflies found - gardens- beautiful colours- 50000 different- இது போல ஆங்காங்கே கோடிட்டு 5 வரிகள் குறைந்த பட்சம் எழுதினால் நிச்சயமாக 3 அல்லது 4 மதிப்பெண்கள் இதற்காக பெற்றுவிடலாம்.
8 ஆவது கேள்வி இத்தோடு முடிந்துவிடவில்லை. அடுத்து வினாவில் கடைசியிலிருந்து 4 ஆவது வார்த்தையாக Summary என்று இருக்கும்.
இதற்கு 5 மதிப்பெண்கள். இதுவும் எளிது தான். எப்படி?
Summary என்ற வார்த்தையை எழுதி அடிக் கோடு போடவும் .
தலைப்பு வைக்க விருப்பமிருந்தால் கொடுக்கப்பட்ட பத்தியின் முதல் வார்த்தையை நடுவில் எழுதி அதற்கும் அடிக் கோடு போடவும்.
பின்னர் Rough Copy என்று அதன் கீழ் பிழையில்லாமல் நடுவில் எழுதி அடிக் கோடு போடவும்.
இப்போது அதன் கீழ் அதிகபட்சம் 7 வரிகள் குறைந்த பட்சம் 6 வரிகள் வரும் அளவிற்கு வினாவில் கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து எழுத வேண்டும். அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றை எழுத வேண்டாம். எழுதி முடித்த பின் குறுக்கே ஒரு கோடு மட்டும் போட்டு அடிக்கவும்.
Rough Copy க்கு கீழே Fair Copy என நடுவில் எழுதி அடிக் கோடு போட வேண்டும். Rough Copy -ல் எழுதியதை ஆங்காங்கே சிறு திருத்தங்கள் செய்து Fair Copy -ல் அதிக பட்சம் 5 அல்லது 6 வரிகள் வருமாறு எழுதிவிட வேண்டும்.
இறுதியாக
No. Words given: 150
No. Words written: 50 - என எழுதினால் மிகச் சிறப்பாக இருக்கும்.
இக்கேள்விக்கு நீங்கள் படிக்க வேண்டிய வார்த்தைகள்,
"Rough Copy, Fair Copy, No. Words given: 150,No. Words written: 50" - அவ்வளவே.
இதற்காக நீங்கள் பெறப் போகும் மதிப்பெண்களோ 8 அல்லது 9.
- எனவே இதுவரை பார்த்த 8 வினாக்களையும் உங்கள் ஆசிரியரின் உதவியோடு மேலும் மேலும் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு எப்போதும் உதவக் காத்திருக்கிறார்கள். இரண்டாம் தாளில் மீதமுள்ள வினாக்களை அடுத்த பகுதியில் காண்போம்.
========== 100 % தேர்ச்சி அடைய வாழ்த்துகள் ==============
No comments:
Post a Comment