திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி?
திருமணப் பதிவு கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்பதை தமிழக அரசு 2009ல் சட்டமாக்கியது. பதிவு செய்யாதவர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும் என எச்சரித்திருந்தது. திருமண மோசடிகள் அதிகம் நடப்பதை தவிர்க்கும் வகையிலே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அலட்சியம் மற்றும் அறியாமை காரணமாக படித்தவர்கள்கூட திருமணத்தை பதிவு செய்வதில்லை. அலுவலம் அலுவலகமாக அலைய வேண்டும் என்பதில்லை. இப்போது ஆன் லைனிலேகூட திருமணத்தைப் பதிவு செய்ய முடியும். தெரிந்து கொள்வோம் வாருங்கள்…
திருமணப் பதிவில், இந்து திருமண சட்டம், சிறப்பு திருமண சட்டம் ( Special marriage Act ) என இரண்டு வகை உண்டு.
இந்து திருமண சட்டம் என்பது, இந்து மதம் மட்டுமல்லாது புத்த மதம், சீக்கிய மதம், ஜைன மதம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இந்தச் சட்டத்தில், திருமணம் வேறொரு இடத்தில் நடந்திருக்கும். அதன் பதிவு மட்டுமே அலுவலகத்தில் செய்யப்படும்.
இதற்கான தகுதிகள் என்னவென்றால், பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் முடிந்திருக்க வேண்டும். இருவருக்குமான உறவுமுறை திருமணத் துக்கு புறம்பானதாக இருக்கக்கூடாது. இருவரில் எவருக்குமே முன்பே ஒரு திருமணம் முடிந்து, துணை இருக்கக் கூடாது.
இந்தத் தகுதிகள் இருக்கும்பட்சத்தில், மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியின் எல்லைக்கு உட்பட்ட அல்லது திருமணம் நடந்த இடத்தின் எல்லைக்கு உட்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வந்து திருமணத்தைப் பதிவு செய்யலாம். இதற்கான பதிவுக் கட்டணம் ஐந்து ரூபாய் மட்டுமே.
அவர்களது திருமணம், எங்காவது (கோயிலிலோ, வீட்டிலோ, மண்டபத்திலோ) எந்த முறையிலாவது (மரபு முறையிலோ, சீர்திருத்த முறையிலோ) நடந்ததற்கான ஆதாரம், பதிவுக்கு அவசியம் தேவை. அது திருமணப் பத்திரிகை, புகைப்படம் அல்லது கோயிலில் தந்த ரசீது போன்ற ஏதாவது ஒன்றாக இருக்கலாம். பதிவுக்கான விண்ணப் பத்தில் மூன்று பேர் சாட்சிக் கையெழுத்திட வேண்டும். அதே மூவர், பதிவு அலுவலகத்துக்கும் நேரில் வந்து கையெழுத்திட வேண்டும். ‘இந்தத் திருமணத்தில் வரதட்சணை வாங்கவும் இல்லை, கொடுக்கவும் இல்லை’ என்று இரு தரப்பிலிருந்தும் உறுதிமொழி தரவேண்டும். மணமக்களின் முகவரிக்கான ஆதாரமும் வயதுக்கான ஆதாரமும் அவசியம் தேவை.
பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி, பதிவு செய்யாமல் விட்டவர்களும் இதே முறையில் பதிவு செய்து கொள்ளலாம்.
அடுத்ததாக, சிறப்பு திருமண சட்டம்… எப்படிப்பட்ட ஜோடியும் (அதாவது இரு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் அல்லது ஒரே மதத்தை சேர்ந்தவர்கள்) இந்தச் சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவு செய்யலாம். அவர்களுக்கு பதிவாளர் அலுவலகத்திலேயே திருமணம் நடத்தி வைக்கப்படும். பிறகு, பதிவும் செய்யப்படும்.
இந்து திருமண சட்டத்துக்கு சொன்ன அனைத்துத் தகுதிகளும் இதற்கும் இருக்கவேண்டும். கூடுதலாக, இன்னொரு விஷயமும் உண்டு. அதாவது, ‘இந்த இருவருக்கும் திருமணம் நடக்கப் போகிறது. ஆட்சேபணை உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்’ என்ற அறிவிப்பு, மணமகன், மணமகள் இருவரின் எல்லைக்குட்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். 30 நாட்களுக்குள் யாரிடமிருந்தாவது ஆட்சேபணை வரும்பட்சத்தில், திருமணம் நடத்தப்பட மாட்டாது. அப்படி எந்த ஆட்சேபணையும் வரவில்லை என்றால், 31-ம் நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் அவர்கள் திருமணம் முடித்து, பதிவும் செய்து கொள்ளலாம். பதிவு தொடர்பான தகவல்கள்http://www.tnreginet.net/என்றஇணையதள முகவரியிலும் கிடைக்கிறது.
திருமணப் பதிவு எதற்கு?
திருமணத்துக்கு என்று வயது வரம்பு இருப்பதால், மிகச் சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொடுப்பதும், குழந்தைத் திருமணங்களும் அறவே நின்றுவிடும் என்பது முதல் நன்மை.
முதல் மனைவி இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்ய முடியாது என்பது அடுத்த நன்மை. இதனால், பெண்களின் மணவாழ்க்கை, அவர்கள் அறியாமலேயே பறிபோவதிலிருந்து காப்பாற்றப்படும். அதேபோல், மணவாழ்வில் பிரச்னை என்று வரும்போது, ‘எனக்கும் இவளுக் கும் திருமணமே நடக்கவில்லை’ என்று கணவன் பொய் சொல்லித் தப்பிக்க முடியாது.
மூன்றாவது, கணவன் இறந்தபிறகு, அவரது சொத்து மற்றும் உடைமைகள், பதிவு செய்யப் பட்ட மனைவிக்குத்தான் சட்டப்படி சேரும். எனவே, கட்டாயமாக திருமணத்தைப் பதிவு செய்திருந்தால், கணவருக்கு சட்டத்துக்குப் புறம்பான துணை இருந்தாலும், அவர்களிடம் சொத்தை இழக்காமல் காப்பாற்றிக் கொள்ள முடியும்! எனவே, ஒவ்வொரு திருமணமும் பதிவு செய்யப்படுவது மிக மிக அவசியம்.
No comments:
Post a Comment