பெண்களிடம் பால்குடிக்கும் குழந்தைப் பேய்
125 ஆண்டுகளுக்கு முன்னர் வத்தளைப் பகுதியை ஆட்டிப் படைத்தது
கடந்த வாரம் தினகரன் வாரமஞ்சரியில் வெளியான பேய் கதையை வாசித்த எனக்கு சிறுவயதில் நான் கேள்விப்பட்ட ஒரு கதை ஞாபகம் வந்தது. இந்த சம்பவம் 125 வருடங்களுக்கு முன்னர் நடந்ததாக என்னுடைய தாத்தா நாங்கள் 12 வயது சிறுவர்களாக இருந்த போது சொன்னார். இப்போது எனக்கு 70 வயதாகிறது. என்னுடைய தாத்தா இந்த சம்பவத்தைப் பற்றி அவரது பெற்றோர் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறார்.
எனது முப்பாட்டனார் (பாட்டனாரின் தந்தை) வத்தளை ஹெந்தலைப் பகுதியில் ஒரு கீரைத் தோட்டத்தை வைத்திருந்தார். அந்த கீரைத் தோட்டத்தில் 4 தமிழ்ப் பெண்களும் 10 ஆண்களும் மாத சம்பளத்திற்கு வேலை செய்தனர்.
அந்த கீரைத் தோட்டத்தில் இருந்து வெட்டப்படும் கீரைக் கட்டுகள் கொழும்பு மாநகரம் முழுவதற்கும் போதுமானதாக இருந்ததாம். அங்குள்ள இரண்டு ஊழியர்கள் இரட்டை மாட்டு வண்டியில் கீரைக் கட்டுகளை ஏற்றிக் கொண்டு அதிகாலை 4 மணிக்கு கொழும்பு புறக்கோட்டைக்கு புறப்பட்டு விடுவார்கள்.
இந்த கீரைக்கட்டுகளை அங்குள்ள 5 பெரிய காய்கறி முதலாளிமாருக்கு விற்பனை செய்துவிட்டு பணத்துடன் திரும்புவார்கள். அப்போது வத்தளை ஹெந்தலைப் பிரதேசத்தில் சன நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. கீரைத்தோட்டமும் அப்பால் உள்ள இன்னுமொரு காய்கறி தோட்டமும் அதையடுத்து அடர்ந்த காடும் எமில்டன் கால்வாய் வரை நீடித்திருந்தது.
கீரைத்தோட்டத்தில் பணிபுரியும் 4 குடும்பங்களுக்கு கீரைத்தோட்டத்தை அண்டிய பகுதியில் 4 குடிசை வீடுகளை என் முப்பாட்டனார் கட்டிக் கொடுத்திருந் தார். அவர்களுக்கு ஒரு கிணறும் பிரத்தி யேகமான கழிவறைகளும் இருந்தன.
அப்போது மின்சார இணைப்பு இல்லாத காரணத்தினால் ஹெந்தலைப் பிரதேசத்தில் உள்ள சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சூரிய அஸ்தமனத்துடன் தங்கள் பணிகளை முடித்து வீட்டுக்கு வந்துவிடுவார்கள். இரவு 8 மணிக்கு பின்னர் அப்பிரதேசத் தில் ஆள் நடமாட்டமே இருக்காது. இந்தக் கீரைத் தோட்டத்தில் பணிபுரியும் ஒரு வாட்ட சாட்டமான உடலமைப்பைக் கொண்ட ஒரு பெண் தோட்டத்து வேலையை முடித்துக் கொண்டு மாலை 6.45 மணியளவில் அங்குள்ள காட்டுப் பாதை மூலம் வீட்டுக்கு விரைவாக நடந்து போய்க் கொண்டிருந்தார்.
அப்போது அவளுக்கு ஒரு குழந்தையின் அழு குரல் கேட்டது. அவள் திரும்பிப் பார்த்த போது தரையில் ஒரு அழகான ஆண் குழந்தை இருப்பதைக் கண்டு பரிதாபப் பட்டு அதனை தூக்கி எடுத்துள்ளார். தாயின் பால் வாசனைக்கு பழக்கப்பட்ட அந்தக் குழந்தை அந்தப் பெண்ணின் சட்டையை பிரித்து மார்பகத்தை பிடித்து பால்குடிக்க ஆரம்பித்தது.
ஐயோ பாவம் பசியினால் தான் இந்த குழந்தை பால் குடிக்கிறதென்று நினைத்துக் கொண்டிருந்த அவள் திடீரென்று குழந்தையை குனிந்து பார்த்த போது அது ஒரு குழந்தையல்ல. குழந்தை உருவில் இருந்த ஒரு அரக்கனைப் போன்று காட்சியளித்தது. இதனால் அவள் அந்த மனிதனை தள்ளிவிட எத்தணித்த போது அவளால் செய்ய முடியவில்லை. அவள் அப்படியே மயக்கத்தில் கீழே விழுந்துவிட்டாள்.
அந்தப் பெண்ணின் கணவன், மனைவி 8 மணியாகியும் வீடு திரும்பவில்லையே என்ற அச்சத்தில் அயல் வீட்டில் குடியிருக்கும் நண்பனையும் அழைத்துக் கொண்டு கையில் ஒரு லாந்தரை ஏந்திக் கொண்டு சென்றுள்ளார். அவர்கள் காட்டு வழியாக கீரைத் தோட்டத்தை நோக்கி சென்ற போது மனைவி மேல் ஆடைகள் கிழிந்த நிலையில் கீழே மயங்கியிருப்பதை அவதானித்து அவளை இருவரும் தூக்கிக் கொண்டு குடிசைக்கு வந்தனர்.
குடிசையில் அவளை தட்டியெழுப்பிய போது அந்தப் பெண் ஒரு பைத்தியக் காரியைப் போன்று என்னை ஒரு பேய் தாக்கி என் பாலை குடித்தது என்று அழுதிருக்கிறாள். இவள் எதையோ பார்த்து பயந்திருக்கிறாள். அங்குள்ள கட்டாடி என்று அழைக்கப்படும் மந்திரக்காரரை அழைத்து கணவன் ஒரு சிறு பூஜையை நடத்தியிருக்கிறான்.
இதையடுத்து அப்பிரதேசத்தில் இதுபோன்ற மூன்று சம்பவங்களில் பெண்கள் சரியாக மாலை 6.45 மணியளவில் சிக்கி பெரும் பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அங்குள்ளவர்கள் இது ஒரு பேயின் விளையாட்டுதான் என்று முதலில் சந்தேகித்தார்கள். சாதாரணமாக ஒரு பேய் ஒரு மனிதனுடைய இரத்தத்தைதான் உறிஞ்சிக் குடிக்கும். ஆனால், இந்தப் பேய் பெண்களின் தாய்ப்பாலை அல்லவா குடிக்கிறது. இதில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறதென்று அங்குள்ளவர்களில் ஒரு புத்திசாலி கூறியிருக்கிறார்.
அவர் இது நிச்சயம் ஒரு கொடிய காமுகனின் விளையாட்டு என்று அடித்துக் கூறியதை அடுத்து அப்பிரதேசத்தில் வாழும் 10 ஆண்கள் இவனை நாம் கண்டுபிடிக்க வேண்டு மென்று திட்டமொன்றை வகுத்தனர்.
ஒருநாள் அவர்கள் திட்டமிட்டபடி எதற்கும் அஞ்சாமல் முன்வரும் முத்து என்ற பெண்ணை அழைத்து அவளை அந்த பாழடைந்த காட்டு வழியில் மாலை 6.45 மணியளவில் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். எப்படியாவது அந்த காமுகனை பிடிக்க வேண்டுமென் பதே அவர்களின் திட்டமாகும்.
குறிப்பிட்ட தினத்தில் முத்து அந்த காட்டுப் பாதையில் நடந்து செல்லும் போது மற்ற ஆண்கள் எவருக்கும் தெரியாமல் மறைந்தவாறு அவளை பின் தொடர்ந்தனர். முதலாவது நாள் அவர்களது முயற்சி வெற்றியளிக்கவில்லை. எதற்கும் சளித்துவிடாமல் மறுநாளும் முத்து அதே காட்டுப் பாதையில் திட்டமிட்டபடி நடந்து சென்றாள்.
அப்போது ஒரு கரடியைப் போன்று கோவணத்தை மட்டும் அணிந்திருந்த ஒரு மனிதர் முத்துவை கட்டிப்பிடித்து அவளது மார்பகத்தை பிடித்தார். உடனடியாக விபரீதத்தை தடுப்பதற்காக அங்கு மறைந்திருந்தவர்கள் அவனைப் பிடித்து நன்றாக அடித்தனர். அப்போதுதான் அவன் ஹெந்தலைப் பகுதியில் உள்ள ஒரு பைத்தியக்கார பிச்சைக்காரன் என்பதை அவர்கள் இனங்கண்டு கொண்டனர்.
அந்த சம்பவத்துக்கு பின்னர் ஹெந்தலைப் பகுதியில் பெண்களின் பால் குடிக்கும் பேய் நடமாடுகிறதென்ற செய்தி பரவ ஆரம்பித்ததை அடுத்து அப்பிரதேசத்துக்கு இரவில் மட்டுமல்ல, பகலிலும் பெண்கள் செல்வதை தவிர்த்துக் கொண்டனர்.
இந்தக் கதை ஒரு யதார்தத்தை எடுத்துக் கூறுகிறது. இதுவொரு பெண்ணின் மனதில் ஏற்படும் நினைவலைகளின் கற்பனையாகவும் இருக்கலாம். முதலாவது பெண் ஒரு குழந்தை போல் இருந்த பேயைப் பற்றி நினைத்துக் கொண்டு ரிsஜி கொண்டிருந்த போது அச்சத்தினால் மயங்கி விழுந்திருக்கலாம். மயக்கத்தில் அவளே தனது மேல் ஆடைகளை கிழித்திருக்கலாம். அது
போன்றே மற்ற இரண்டு பெண்களும் முதல் பெண்ணுக்கு நடந்தது போன்று தங்களுக்கும் நடந்துவிட்டதென்ற மாயையில் மயங்கி விழுந்திருக்கலாம். கடைசியாக வந்த பெண் முத்துக்குத்தான் உண்மையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டது. அதுவும் சுய புத்தியற்ற ஒரு பைத்தியக்காரனின் அந்த அனர்த்தம் ஏற்பட்டது. இதுதான் உண்மையான கதை. இப்படியான கதைகளை அடிப்படையாக வைத்துதான் அதனைப் பெரிதுபடுத்தி பேய் நடமாட்டம் போன்ற பொய்யான கட்டுக் கதைகளும் வதந்திகளும் நாட்டில் பரவுகின்றன. தெய்வ நம்பிக்கையுடையவர்கள் பேய்களை நம்ப மாட்டார்கள் என்பதை நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
இந்தக் கதையை மாத்தளையில் இருந்து எஸ்.கந்தசாமி என்பவர் எழுதியனுப்பி இருக்கிறார்.
No comments:
Post a Comment