Wednesday, 25 November 2015

பிளாக் பாக்ஸ்’

பிளாக் பாக்ஸ்’

மிகத் தொலைவிலிருந்து பார்த்தால் தெரியும் வண்ணம் ஆரஞ்சு என்பதால், கறுப்புப் பெட்டி ஆரஞ்சு நிறத்தில் தான் இருக்கும். கூடவே, ‘யாரும் திறக்கக் கூடாது’ என்ற எச்சரிக்கையும் பதியப்பட்டிருக்கும்.பறக்கும் விமானத்தின், 100க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளை சில வினாடிக்கு ஒருமுறை, ‘பிளாக் பாக்ஸ்’ பதிவு செய்யும். இறக்கை, வால்பகுதி, எரிபொருள் அளவு, பறக்கும் உயரம் போன்ற பல தகவல்கள் பதிவாகும். கறுப்புப் பெட்டிக்கு உள்ளே இருக்கும் மின்னணு சாதனம், இவை எல்லாவற்றையும், ‘டிஜிட்டல்’ சங்கேத முறையில் பதிவு செய்யும். அதனால்தான் விமானத் துறையினர், இதை, ‘பிளைட் டேட்டா ரெக்கார்டர்’ என கூறுகின்றனர். பதிவான தகவல்களை உரியவர்கள் அன்றி, வேறு யாரும் திறக்க முயன்றால் அதுவும் பதிவாகும்.பெரிய மின்கலன், பெட்டி தன் இருப்பிடத்தை தெரிவிக்க உதவும் சமிக்ஞை ஆன்டெனா, அதிக வெப்பம், மித மிஞ்சிய குளிர், கடலடி நீர் அழுத்தம், பாறைமேல்

மோதுவது போன்ற பலவற்றையும் தாங்கும் விதத்தில், பல அடுக்கு உலோக பாதுகாப்பு கவசத்திற்குள் பதிவு சாதனத்தை வைத்திருப்பர். 
விமானிகளின் கடைசி இரண்டு மணி நேர ரேடியோ உரையாடல்களை பதிவு செய்ய, ‘காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்’ என்ற விமானிகள் அறை உரையாடல் பதிவு சாதனம் தனியே இருக்கும்.பல விபத்துகளில், விமானத்தின் வால் பகுதி தப்பிப்பதால், கறுப்புப் பெட்டி அங்கே தான் வைக்கப்பட்டிருக்கும். கண்டம் விட்டு கண்டம் செல்லும் விமானங்கள் விபத்துக்குள்ளானால், கடலில் தான் அதிகம் விழுகின்றன. 
ஆஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் வாரன், 1953ல் கருப்புப் பெட்டியை உருவாக்கினார். ஆனால், அதற்கு முன்பும் விமான தகவல் 
பதிவு சாதனங்கள் இருந்தன. அவற்றை ஒரு முறை தான் பதிவு செய்ய முடியும். வாரன், காந்த பதிவு முறையை கொண்டு வந்ததால், ஒவ்வொரு பயணத்தின் போதும், பழைய தகவல் அழிக்கப்பட்டு, புதியவை பதியப்படும். அதாவது விபத்து நடக்கும் வரை. அதன் உள் வேலைப்பாடுகள் பற்றி யாருக்கும் தெரியாததாலும், ஒளி புகாமலிருக்க உள்ளே கறுப்பு வண்ணம் பூசி, இறுக்கமாக மூடப்பட்டு இருப்பதாலும் இதற்கு, ‘பிளாக் பாக்ஸ்’ என்று பெயர் வந்திருக்கலாம். இது பிரபலமாவதற்கு ஊடகங்களும் ஒரு காரணமாக இருக்கலாம். கருப்புப் பெட்டியால், பல விமான விபத்துகளின் உண்மைக் காரணங்கள் தெரிய வந்திருக்கிறது. ஆனால், இன்னும் அது ரேடியோ யுகத்திலேயே இருப்பதால், பலர் அதை மேம்படுத்த வேண்டும் என்று வாதிடுகின்றனர். கறுப்புப் பெட்டியை விட, விமானத்தில் 
இருக்கும் பயணிகளிடம் அதிநவீன சாதனங்கள் இருப்பதை, விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

No comments:

Post a Comment